வாக்குச்சீட்டு பற்றாக்குறையால் சர்ச்சை! தென் கொரியா தேர்தல் ஆணையத் தலைவர் ராஜினாமா!
தென் கொரியாவில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குச்சீட்டு விநியோக சிக்கல், அந்நாட்டு அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நாளில் பல பகுதிகளில் வாக்குச்சீட்டுகள் போதுமான அளவில் கிடைக்காததால் வாக்காளர்கள் சிரமங்களை எதிர்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்துக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்ட தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் ரோ டே-அக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தேர்தல் நிர்வாகத்தில் ஏற்பட்ட இந்த தவறு பொதுமக்களின் நம்பிக்கையை பாதித்துள்ளதாகவும், அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகள் செயல்பட்ட போதிலும், சில பகுதிகளில் வாக்குச்சீட்டுகள் எதிர்பாராத விதமாக தீர்ந்துபோனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில மையங்களில் விநியோக தாமதங்களும் பதிவாகியுள்ளதால், வாக்குப்பதிவு நடவடிக்கைகள் குறிப்பிட்ட நேரத்திற்கு பாதிக்கப்பட்டன.
இந்த நிலைமைக்கு காரணமாக, முன்கூட்டியே நடைபெற்ற வாக்குப்பதிவில் அதிகளவிலான மக்கள் பங்கேற்றதை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதனால் தேர்தல் நாளில் தேவையான அளவு வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படாததே பிரச்சினையை உருவாக்கியதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சில மாவட்டங்களில் வாக்காளர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், தேர்தல் அதிகாரிகளிடம் விளக்கம் கோரி ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர். குறிப்பாக சில இடங்களில் வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்படுவதை தடுத்து நிறுத்தும் முயற்சிகளும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு, காவல்துறையினரின் உதவியுடன் தேர்தல் பணிகள் நிறைவு செய்யப்பட்டன. பின்னர் வாக்கு எண்ணிக்கையும் முடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக சுயாதீன நிபுணர்களைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தேர்தல் நடைமுறைகளில் ஏற்பட்ட குறைபாடுகளை ஆய்வு செய்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகள் மீண்டும் ஏற்படாத வகையில் பரிந்துரைகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு சட்ட நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகள் மற்றும் நிர்வாக செயல்முறைகள் குறித்து மீளாய்வு செய்ய வேண்டும் என சில தரப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனால் தென் கொரியாவின் தேர்தல் நிர்வாகம் மீதான கவனம் அதிகரித்துள்ளது.


No comments:
Post a Comment